கிருஷ்ணகிரி, நவ. 26: தமிழக அரசின் இலவச மின் இணைப்புப் பெற தடையில்லா சான்று கேட்கக் கூடாது ன்று கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் வி.அருண் ராய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் விவரம்:
தமிழக அரசின் இலவச மின்இணைப்பு பெற, பொதுப்பணித்துறையினர் தடையில்லா சான்று கோருவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக விண்ணப்பிப்போர் தடையில்லா சான்றை இணைக்க வேண்டும் எனலாம். காத்திருக்கும் விவசாயிகளுக்கு நிபந்தனைகள் இன்றி இலவச மின்இணைப்பு வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்க வேண்டும்.
மா சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பித்தால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆடு வளர்க்க ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. கூடுதல் தொகை வழங்க வேண்டும்.
பாலதோட்டனப்பள்ளிக்கு செல்லும் சாலை சீர் அமைக்க வேண்டும். படப்பள்ளி ஊராட்சியில் துணை கால்நடை மருத்தகம் அமைக்க வேண்டும். திம்மாபுரம் ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காவேரிப்பட்டணத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பி.பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நா.நாச்சியப்பன், ஆவின் பொது மேலாளர் நைனப்பன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.