தருமபுரி

ஒரே வாரத்தில் 3 இளம் வயது திருமணங்கள்!

ஒசூர், ஜூன் 8: ஒரே கிராமத்தில் ஒரு வாரத்தில் 3 இளம் வயது திருமணங்கள் நடந்துள்ளன. அதே சமயம், 17 வயது சிறுமியின் விவாகரத்தும் நடந்துள்ளது. இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு எவ்வளவோ நடவடிக்கை எட

டி.ஞானபிரகாசம்

ஒசூர், ஜூன் 8: ஒரே கிராமத்தில் ஒரு வாரத்தில் 3 இளம் வயது திருமணங்கள் நடந்துள்ளன. அதே சமயம், 17 வயது சிறுமியின் விவாகரத்தும் நடந்துள்ளது.

இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இந்த அவலம் தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கோட்டம் தளி தொகுதி அஞ்செட்டி அருகே, நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ளது பஞ்சல்துணை கிராமம். கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தின் கடைசி கிராமம். ஒசூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள இக் கிராமம், 4 புறமும் மலையைச் சுற்றி நடுவில் உள்ளது.

இங்கு லிங்காயத் மற்றும் வன்னியர் அதிகம் வசிக்கின்றனர். சுமார் 400 குடும்பத்தினர் வசித்தாலும்,12 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்புக்கு சேசுராஜபுரம் கிராமத்துக்குத்தான் செல்ல வேண்டும். மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு அஞ்செட்டி செல்ல வேண்டும்.

இக்கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக பெண் குழந்தைகளுக்கு வளர் இளம் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க போதிய வசதி இல்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புத்திரி (40). இவரது மனைவி கோவிந்து. இவர்களுக்கு 2 மகன்கள். மகள் ஆனந்தி (14). இவர் புனித சேசுராஜபுரம் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள செங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் குருசாமி (25) என்பவருக்கும் திங்கள்கிழமை (ஜூன் 6) திருமணம் நடைபெற்றது. இளம் வயது திருமணம் குறித்து புத்திரியிடம் கேட்டபோது, பெண் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்வதைவிட இளம் வயதில் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்றார்.

மேலும் ஒரு இளம் வயது திருமணம்: பஞ்சல்துணை கிராமத்தைச் சேர்ந்த கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யும் மகேந்திரனுக்கு (45) திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் குழந்தை கிடையாதாம். இதனால், இவருக்கும் பஞ்சல்துணை கிராமத்தைச் சேர்ந்த குமார் மகள் கலாவதி (14) என்ற சிறுமிக்கும் புதன்கிழமை (ஜூன் 8) கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி திருமணம் முடிந்தபிறகே வந்தார். மகேந்திரனையும் கலாவதியின் பெற்றோரையும் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில் தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே உள்ள குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரோஷிணிக்கு (15) கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை (ஜூன் 6) ரகசியமாகத் திருமணம் நடைபெற்றது. இவரது உறவினர்கள் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வந்து சேருவதற்கு முன்பே கோயிலில் திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியை தருமபுரிக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

12 வயதில் திருமணம்; 17 வயதில் விவாகரத்து; அபராதம் ரூ.10 ஆயிரம் பஞ்சல்துணை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி கல்வீரப்பா. இவரது மனைவி நாகம்மா.

இவர்களுடைய மகள் மாதவி (இப்போது வயது 17). இவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு (12 வயதில்) தளி அருகே உள்ள சொல்லேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார் மகன் முனியப்பாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 4) அஞ்செட்டியில் நடைபெற்ற கட்டப் பஞ்சாயத்தில் இருவருக்கும் விவாகரத்து செய்து வைக்கப்பட்டது. முனியப்பாவுக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது. அவரும் அந்தப் பணத்தை கட்டிவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

ஆனால், மாதவி குடும்பத்தினர் பஞ்சல்துணை கிராமத்தை விட்டு வெளியேறி வேறு கிராமத்துக்குச் சென்றுவிட்டனர்.

மாணவ, மாணவிகளின் படிப்புக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இந்த இரு மாவட்டங்களில் இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் இப்போதும் தொடரும் அவலம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT