தருமபுரி

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் பராமரிப்பில்லா பூங்கா; பழுதடைந்த கட்டடம்

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்கா  மற்றும் பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்கா  மற்றும் பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் செந்தில் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ராஜாஜி நீச்சல் குளம் உள்ளது.  கடந்த 1988-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி,  40-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி,  இந்த நீச்சல் குளம் திறக்கப்பட்டது.  பொதுவாக,  எல்லா மாவட்டங்களிலும்,  மாவட்ட விளையாட்டரங்கத்தில்  நீச்சல் குளம் அமைந்திருக்கும்.  ஆனால்,  தருமபுரி மாவட்டத்தில் மட்டும்,  மாவட்ட விளையாட்டரங்கத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில்  நீச்சல் குளம் அமைந்துள்ளது.  
     இந்த நீச்சல் குளத்தில் உயிர் காப்பாளர் 4 பேர்,  பம்ப் ஆபரேட்டர் ஒருவர்,  இரவுக் காவலாளி  மற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் பணிபுரிகின்றனர். தருமபுரி பகுதியில், ஆண்டு முழுவதும் மழைக் காலம் தவிர்த்து,  ஓரளவு வெப்ப நிலை நிலவுவதால்,   நீச்சல் பழக  மாணவ,  மாணவியர் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இது தவிர,  நீச்சல் வீரர்களும் இக் குளத்தைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும்,  ஒவ்வோர் ஆண்டும்,  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.  குறிப்பாக,  கோடை காலத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்,  சிறுமியர்,  மாணவர்கள் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர்.  
பராமரிப்பில்லா பூங்கா:  இந்த நீச்சல் குளம் பகுதியில் சிறுவர் மற்றும் சிறுமியர் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.  இப் பூங்காவில், சறுக்கி விளையாடுதல்,  ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாட ஏதுவாக  உபகரணங்கள் அமைக்கப்பட்டன.  ஆனால்,  காலப்போக்கில் இவையாவும் பராமரிப்பின்றி, துருப் பிடித்தும்,  உடைந்தும்,  விளையாடுவதற்கு தகுதியற்று பல ஆண்டுகளாக வீணாகக் கிடக்கின்றன.  மேலும், பூங்கா முழுவதும் இலைகள்,  புற்களால் புதர் மண்டிக் கிடக்கின்றன.
பழுதடைந்த கட்டடம்:   நீச்சல் குளத்தை ஓட்டி அனுமதிச் சீட்டு வழங்கும் அறை,  முக்கிய நபர் அறை,  பெண்கள் குளிக்க,  உடை மாற்ற அறை,  ஆண்கள் உடை  மாற்ற அறை, கழிப்பறை  உள்ளடக்கிய கட்டடம் உள்ளது.  இக்  கட்டடத்தில் கழிப்பறையிலிருந்து கழிவுகள் தொட்டிக்குச் செல்லும் குழாய்கள் பழுதடைந்துள்ளன.  இதனால், கழிவுநீர் கட்டடத்தின் சுவரை ஓட்டியே வெளியேறுகிறது.  மேலும்,  கழிப்பறைகளும் முறையாகப் பராமரிக்கப்படாததால்,  துர்நாற்றம் வீசுகிறது.  அதே போல,  கட்டடத்தின் அருகில் சிறுவர்கள் குளிக்க இரண்டு சுவர் அமைத்து,  அதில் இரண்டு பக்கமும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஆனால்,  இதில் உள்ள குழாய்கள் பழுதடைந்துள்ளன.  இதனால், சுவரில் இருபக்கமும் ஒவ்வொரு குழாய்களில் மட்டும் தண்ணீர் வருகிறது.  மேலும், இக் கட்டடத்தின் வெளிப் பக்கத்தில் சுவர் முழுவதும் பழுதடைந்து செங்கல்கள் வெளியே தெரிகின்றன.  அதேபோல,  நீச்சல் குளத்துக்கு தங்களது குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் அமருவதற்கு இருக்கைகள் ஏதுமில்லை.  நீச்சல் குளத்தில் சுற்றுச்சுவரையொட்டி,  தேங்காய் மட்டைகள் விழுந்து சுகாதாரமின்றி காணப்படுகின்றன.  
எனவே,  பூங்காவில் சிறுவர்,  சிறுமியர் விளையாட ஏதுவாக அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் புதுப்பித்து,  பூங்காவைத் தூய்மை செய்து முறையாக பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.  அதேபோல,  மிகவும் பழுதடைந்த மோசமான நிலையில் உள்ள கட்டடத்தையும் புனரமைத்து,  நுழைவு வாயில் அருகே பெற்றோர் அமருவதற்கு இருக்கைகள் மற்றும் பழுதடைந்த குழாய்களை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
     இது குறித்து, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஜி.எஸ்.ராஜேந்திரன் கூறியது:  ராஜாஜி நீச்சல் குளத்தில் உள்ள பூங்கா,  கழிப்பறைகள் மற்றும் கட்டடத்தை  ஆய்வு செய்து,  புனரமைப்புப் பணி மேற்கொள்ள துறைக்கு அண்மையில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.  தற்போது, கோடை கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதால்,  இப் பணிகள் மேற்கொண்டால் பயிற்சிக்கு வருவோருக்கு இடையூறாக இருக்கும்.  எனவே,  கோடை முடிந்தவுடன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT