முகப்பு
தருமபுரி

தருமபுரியில் வட்டார தடய அறிவியல் ஆய்வகம் தொடக்கம்

தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய வட்டார அளவிலான தடய அறிவியல் ஆய்வகத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய வட்டார அளவிலான தடய அறிவியல் ஆய்வகத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். தற்காலிகமாக மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் இந்த ஆய்வகத்துக்கு விரைவில் பிரத்யேகமான கட்டடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
விழாவில் கே.பி. அன்பழகன் பேசியது:-
குருதி,  எச்சில்,  முடி,  வாகனச் சக்கர அச்சு,  காலணிகளின் அச்சு,  கைரேகை,  காலடித் தடங்கள்,  வெடிபொருள்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள், கையெழுத்துகள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து குற்றச் சம்பவங்களின் துப்புகளை போலீஸாருக்கும்,  நீதித்துறைக்கும் வழங்குகின்றனர். இதனால், குற்றங்களில் நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகளைக் கண்டறியவும்,  நிரூபிக்கவும் முடிகிறது. 
ஆசியாவிலேயே சென்னையில் 1849ஆம் ஆண்டில் சென்னையில்தான் தடய அறிவியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தற்போது 34 நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்களும், 10 இடங்களில் வட்டார அளவிலான ஆய்வகங்களும் உள்ளன. தருமபுரியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது 10ஆவது ஆய்வகமாகும். 
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம்,  சென்னைப் பல்கலைக்கழகங்களில் தடயவியல் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தத் துறையானது 58,804 வழக்குகளைக் கையாண்டு, அவற்றில் 2,11,718 மாதிரிகளை ஆய்வு செய்து குற்றங்களைக் கண்டறிய ஆய்வறிக்கைகளை அளித்துள்ளது. சுமார் 2100 வழக்குகளில் நீதிமன்றங்களில் தடய அறிவியல் ஆய்வக அலுவலர்கள் சாட்சியம் அளித்துள்ளனர் என்றார் அன்பழகன்.
இதைத் தொடர்ந்து, சமூக நலத் துறையின் சார்பில் 19 பேருக்கு ரூ. 7.25 லட்சம் மதிப்புள்ள திருமண உதவித் தொகையும் தாலிக்குத் தங்கமும்,  முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பேருக்கு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காசோலைகளும் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார்.  தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) ஆர். வாசுகி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கே. சீனிவாசராஜ்,  கண்காணிப்பாளர் எம். இளங்கோவன்,  உள்ளிருப்பு அலுவலர் ஆர். சுரபி,  இணை இயக்குநர் அ. கொளஞ்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →