முகப்பு
தருமபுரி

"பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்'

பழங்குடியின மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

Updated On : 16 மார்ச் 2018, 8:31 am IST
பகிர்:

பழங்குடியின மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என உதகமண்டலம் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார்.
அரூரில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தகடூர் ஒளவை அதியமான் பேரவை சார்பில் நடைபெற்ற தொல்லியல் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் (பொ) மா.செல்வபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் உதகமண்டலம் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் எஸ்.உதயகுமார் பேசியது: உலகளவில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா.  இதில், தமிழகத்தில் 36 விதமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். 
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மலையாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நீலகிரி மாவட்டத்தில் 6 விதமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அதாவது இந்த மாவட்டத்தில் 32, 812 பேர் வசிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின  மக்களின் தொகையானது படிப்படியாக குறைந்து வருகிறது. 
 பழங்குடியின மக்களிடம் நல்ல பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கட்டுக்கோப்பான ஒற்றுமைகள் உள்ளன. இன்றளவும் கூட காதல் திருமணங்களை பழங்குடியின மக்கள் விரும்புவதில்லை. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். உயர்கல்வி பயிலும் ஆய்வு மாணவர்கள் பழங்குடியினர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொல்லியல்துறை இணை இயக்குநர் (ஓய்வு) தி.சுப்பிரமணியன் பேசியது: தொல்லியல் துறை என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த துறையில் கள ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, அகழ்வாராய்ச்சி, கட்டடக் கலை, ஓலைச்சுவடி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை கொண்டதாகும்.  தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாராங்கள் கிடைத்துள்ளன. எனவே, நாம் நம்முடைய  வாழ்க்கை முறைகளையும், உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள தொல்லியல் துறை சார்ந்த நூல்களை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றார்.
இந்த கருத்தரங்கில் பேராசிரியர் சி.சந்திரசேகர், தகடூர் ஒளவை அதியமான் பேரவையின் தலைவர் சி.சீனிவாசன், துணைத் தலைவர்கள் இ.பி.பெருமாள், ஆர்.கே.கண்ணன், செயலர் சி.ராஜசேகரன், துணைச் செயலர் ரா.சிசுபாலன், பொருளாளர் டி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.