தருமபுரி

உடைந்த பைபர் கட்டடம், பணிக்கு வர இயலாத ஆசிரியர்!: அலக்கட்டுமலைக்கிராமத்தின் அவலம் தீர்க்கப்படுமா?

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சியின் குறைந்தபட்ச எல்லையையும் காண முடியாத அவலநிலையில் அலக்கட்டு மலைக்கிராமம் காணப்படுகிறது.

சா. ஜெயப்பிரகாஷ்


தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சியின் குறைந்தபட்ச எல்லையையும் காண முடியாத அவலநிலையில் அலக்கட்டு மலைக்கிராமம் காணப்படுகிறது. பள்ளிக்கும் குடியிருப்புகளுக்கும் உறுதியான கான்கிரீட் கட்டடங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அலகட்டு கிராம லிங்காயத்து சமூக மக்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோட்டில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ள சீங்காடு என்ற பகுதியிலிருந்து வனம் சூழ்ந்த கரடுமுரடான பாதை கொண்ட மலைகள், ஓடைகளைக் கடந்து சென்றால் சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது அலக்கட்டு மலைக்கிராமம். கீழே இறங்கி வர மலைக் கிராம மக்களுக்கு முக்கால் மணி நேரம் பிடிக்கிறது, மற்றவர்களுக்கு இரண்டு மணி நேரம் ஆகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து இந்தக் கிராமத்தில் முதல் குடியமர்ந்தவர் பூஜாரியப்பா. அவரது வழிவந்த குடும்பத்தினர்தான் இன்றைய மொத்த அலக்கட்டு கிராமம். தற்போது 20 வீடுகள் உள்ளன. 38 குடும்பங்கள் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டுவில்லைக் கட்டடங்களே! தற்போது மழையின்போது ஒழுகும் இந்த ஓடுகள் விரைவில் மோசமாகப் பழுதடையலாம் என்ற அச்சம் அலக்கட்டுவாசிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பென்னாகரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பைபர் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. சாலை வசதி முற்றிலும் இல்லாததால் எளிதில் பைபர் பலகைகளை எடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது.
தற்போது இந்த பைபர் அறைகளும் உடைந்து பாழடைந்து போயிருக்கின்றன. ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ஆம் வகுப்பு வரை பாடம் எடுப்பதற்காக ஒரேயொரு ஆசிரியர். உண்மையில் ஆசிரியர் ஒருவர் வந்து செல்வதற்கான எந்தச் சாத்தியமுமில்லை.
வெளியாட்களால் இரவில் ஒரு மணி நேரமும் கூட இருக்க முடியாத குளிர். அண்மையில் நியமிக்கப்பட்ட ஆசிரியரும் கடந்த மூன்று வாரங்களாக விடுப்பில் இருக்கிறார். அதன்பிறகு சிறப்புக் கல்வித் திட்டத்தில் 6,7,8 வகுப்புகள் உள்ளூரைச் சேர்ந்த ஒரேயொரு பட்டதாரியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
எட்டாம் வகுப்பை முடித்த இருவரும், 5ஆம் வகுப்பை முடித்த 5 பேரும் இங்கே இருக்கிறார்கள். அதைத் தாண்டி கல்வி இவர்களைச் சென்றடையவில்லை. அண்மையில் வனத்துறை சார்பில் குடிநீர்த் தொட்டி கட்டித் தரப்பட்டுள்ளது. இத்தொட்டிக்கு உள்ளூர் கிணறு ஆதாரமாக உள்ளது. இம்மக்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை பாலக்கோடு வந்து உணவுக்கான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.
மருத்துவ வசதி பூஜ்ஜியம். கடந்த 3 ஆண்டுகளில் இரு பெண்கள் மகப்பேறு காலத்தில் உயிரிழந்துள்ளனர். தூளி கட்டி கீழே தூக்கி வர வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சூழலில் மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் எடுத்து, அனைத்துக் குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்கிறார்கள் அலக்கட்டுவாசிகள்.
மேலும், இம்மக்களின் எதிர்கால கல்வியறிவையும் கவனத்தில் கொண்டு நடுநிலைப் பள்ளிக் கூடத்துக்கான விசாலமான கட்டடங்களையும், பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர் அதே வளாகத்தில் தங்கும் வசதியுடன் செய்துத் தர வேண்டும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT