தருமபுரி

தருமபுரியில் கூட்டுறவு வார விழா: ரூ. 9.45 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கல்

DIN

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1620 உறுப்பினர்களுக்கு ரூ. 9.45 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 531 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 446 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 561 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், 9 மகளிர் நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1016 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 
இவற்றின் மூலம் 3.71 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 14 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 56 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 70 கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 
கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 723 கோடி பயிர்க்கடனும், ரூ 50.80 கோடி முதலீட்டுக் கடனும், ரூ. 85.77 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனும், ரூ.3,343 கோடி நகைக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 28016 பயனாளிகளுக்கு ரூ. 139 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ. 115 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதரக் கடன்காக ரூ. 201 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடன் தவணைகளைத் தவறாது திரும்பச் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டித் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தின்படி கடந்த 7 ஆண்டுகளில் 1.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 38.95 கோடி வட்டி மானியம் அரசிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லாகான், சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மா. சந்தானம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தி. ரேணுகா, மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர். அன்பழகன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT