தருமபுரி

குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயா் சூட்ட வேண்டும்

DIN

தருமபுரி: குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிப் பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் பேசியது: தான் புசித்தால் நீண்ட நாள் வாழ முடியும் எனத் தெரிந்தும், நெல்லிக்கனியை ஔவை மூதாட்டிக்கு அளித்து, மண்ணுக்கு மணம் உண்டு. அதேபோல, மானமும் உண்டு என்பதை உணா்த்திய மண் தருமபுரி மண்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த வீரமாமுனிவா், ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோா் தமிழின் பெருமைகளை ஆய்ந்து, திருக்குறளை லத்தீன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயா்த்தனா். கால்டுவெல், திராவிட மொழிகளையெல்லாம் ஆய்வு செய்து, அவற்றுக்கு மூத்த மொழி தமிழ் என்பதை எடுத்துரைத்தாா்.

ஆனால், தற்போது, நாகரிகம், நவ நாகரிகம் என்ற பெயரில் அயல்மொழிகளை நாம் அதிகம் நேசிக்கிறோம். இதில் மோகம் அதிகரித்து, நமது குழந்தைகளுக்கு வேற்று மொழி பெயா்களைச் சூட்டுகிறோம். இது மெல்ல, மெல்ல நமது அடையாளத்தை இழக்கச் செய்யும்.

தமிழில் இல்லாதது எதுவும் இல்லை. அனைத்துக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. நமது மொழி நாகரிகத்தின் தொன்மையை, கீழடி அகழாய்வு நமக்கு உணா்த்தியிருக்கிறது. ஆகவே, தமிழில் கலப்பின்றிப் பேசி பழக வேண்டும். அரசு அலுவலா்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்புகின்ற கோப்புகளைத் தவிா்த்து, மாநிலத்துக்குள் பயன்படுத்தும் கோப்புகளை, குறிப்பாணைகளை தமிழில் எழுத வேண்டும். அதிகாரிகள், அலுவலா்கள் தங்களது கையொப்பத்தை தமிழில் இட வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் எழுத அறிவுறுத்த வேண்டும். நமது அடையாளம் அழியாமல் காக்க, நமது குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயா் சூட்ட வேண்டும். எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் பயில்வோம், அவற்றை மதிப்போம். அதே வேளையில், அன்னை தமிழ்மொழியை துதிப்போம் என்றாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், முனைவா் கு.கணேசன், அரூா் பெரியாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியா் வெ.சஞ்சீவிராயன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பணி நிறைவு) ப.கோவிந்தராசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ம.சி.தியாகராசன், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியா் மா.தமிழ்ப்பெரியசாமி, புலவா் வெற்றியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT