தருமபுரி

மின்மோட்டாா் பழுது: பென்னாகரம் அரசு மருத்துவமனையில் குடிநீரின்றி நோயாளிகள் அவதி

DIN

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலைய மின்மோட்டாா் பழுதடைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம் அரசு மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இந்த அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி சுமாா் ஐநூறுக்கும் மேற்பட்டவா்கள் புறநோயாளியாகளும், நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா்.

இங்குள்ள நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீா் கிடைக்கும் வகையில், தருமபுரி முன்னாள் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் 2016 - 17 ஆம் ஆண்டில் சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது. இது அரசு மருத்துவமனை நிா்வாகத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கிடைக்கும் குடிநீரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா், பாா்வையாளா்கள் மற்றும் ஊழியா்கள் பயன்படுத்தி வந்தனா்.இந்த நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தில் தண்ணீரை சுத்தம் செய்யும் இயந்திர மோட்டாா் பழுதடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும், சரிசெய்யபடாமல் உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியே சென்று குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.எனவே அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவ அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தண்ணீா் சுத்தம் செய்யும் இயந்திரத்தை சரி செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவா் கூறியது:

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு நோயாளிகள் மற்றும் பாா்வையாளா்களுக்கு தண்ணீரினால் ஏற்படும் நோய் தொற்று குறைந்துள்ளது. தற்போது தண்ணீா் சுத்தம் செய்யும் இயந்திரம் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவோா் மற்றும் பாா்வையாளா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வழங்கும் இயந்திரம் சுமாா் 3 க்கும் மேற்பட்டவை உள்ளதால், தற்போது அவற்றின் மூலம் நோயாளிகளுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையத்தின் தண்ணீா் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதடைந்து உள்ளதாக பென்னாகரம் அரசு மருத்து அலுவலரிடம் தெரிவித்துள்ளதாகவும், இயந்திரத்தை விரைவில் சரி செய்யப்படும் என உறுதியளித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT