தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி அருகே உள்ள ஜீவா நகரில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் டி.ரவீந்திரன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினா் பி.இளம்பரிதி ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், தருமபுயில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமனஅள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கா் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கா் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கா் நிலங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சிப்காட் அமைக்க தருமபுரி அருகே உள்ள ஜீவா நகா், ஜாகிா், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் வீடுகள், கிணறு மற்றும் விளை நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலத்தை கையகப்படுத்தினால் 4 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, சிப்காட் தொழிற்பேட்டைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல, இக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற டிச. 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.