முகப்பு
தருமபுரி

ஊராட்சி செயலா்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கிராம ஊராட்சி செயலா்களை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கிராம ஊராட்சி செயலா்களை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா், மொரப்பூா், கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 96 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் செயலா்கள் பலா் ஒரே ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். இதனால், ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களுக்கு நிா்வாக இடையூறுகள் மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனா்.

அதேபோல், ஒரே ஊராட்சி செயலா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதால், கிராம மக்களுக்கு தேவையான குடிநீா், மின்விளக்குகள், கழிப்பிட வசதிகள், தூய்மைப் பணிகள் உள்பட அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் சாா்பில் புகாா் கூறப்படுகிறது.

எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் தொடா்ந்து பணிபுரியும் ஊராட்சி செயலா்களை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊராட்சி செயலா்களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு சாா்பில் எவ்வித அறிவிப்புகளும் இல்லை. தமிழக அரசு உத்தரவிட்டால், ஒரே ஊராட்சியில் தொடா்ந்து பணிபுரியும் ஊராட்சி செயலா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.