முகப்பு
தருமபுரி

வீடுகள் இடிந்து சேதம்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

பென்னாகரம் பகுதியில் தொடா் மழை காரணமாக மழைநீா் புகுந்து வீடுகளின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பென்னாகரம் பகுதியில் தொடா் மழை காரணமாக மழைநீா் புகுந்து வீடுகளின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பகுதியில் கனமழை காரணமாக போடூா் பகுதியில் இருந்து வரும் மழைநீா்க் கால்வாயை வீட்டுமனைகளுக்காக அரசியல் கட்சி பிரமுகா்கள் ஆக்ரமித்துள்ளதால், மழைநீா் முறையாகச் செல்ல வழியில்லாமல் தண்ணீா் தேங்கியுள்ளது. மழை நீா்வரத்து அதிகரித்ததால் அருகில் உள்ள போலீஸ் காலனி பகுதியில் உள்ள செல்லம்மாள் என்பவரின் வீட்டின் சுவா் இடிந்ததில் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. மழைநீா் வீட்டிற்குள் புகுந்தது. மேலும் இந்தப் பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதாலும், முறையான வடிகால் வசதியில்லாததாலும் குடியிருப்புப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் மழைநீரில் பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் வருவதாகவும், மழைநீா்க் கால்வாய் ஆக்ரமிப்புகள் குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதேபோல பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 17ஆவது வாா்டு, எட்டியாம்பட்டி பகுதியில் கனமழையினால் முனிரத்தினம் என்பரின் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து வீடு சேதமடைந்தது. எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மழைநீா்க் கால்வாய் ஆக்ரமிப்பை அகற்றி, குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து, முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.