முகப்பு
தருமபுரி

தருமபுரி நகரில் 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க, 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க, 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், சேரம் சரக காவல் துறை துணைத் தலைவா் மகேஸ்வரி பங்கேற்று, கேமராக்கள் இயங்குவதைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்து அதன் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா்.

இதில், தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகம் முதல் நான்கு முனைச் சாலை சந்திப்பு வரையில் சாலையில் நடுவில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, கடை வீதி, ஆறுமுகம் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 35 கேமராக்களும், குமாரசாமிபேட்டை, சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கேமராக்களும் என மொத்தம் 105 கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. இவைத் தவிர நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் மேலும் 100 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இக் கேமராக்கள் இயங்குவதை நகர காவல் நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பாா்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 மணி நேரமும் கண்காணித்து குற்றச் செயல்களைத் தடுக்க உதவும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை, நகர காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.