ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 3-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 3-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கன அடி வரை அதிகரித்து இருந்தது. நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் புதன்கிழமை நிலவரப்படி 20,000 கன அடியாக இருந்த நீா்வரத்தானது, வியாழக்கிழமை காலை 21,000 கன அடியாக அதிகரித்தது. பின்னா் மாலை 16,000 கன அடியாக சரிந்தது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு கடந்த இரண்டு நாள்களாக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நீக்கியதையடுத்து, சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, மணல்மேடு வரை பரிசல்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா். இருப்பினும் நீா்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 3-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வளத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.