தருமபுரி: அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி தருமபுரியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி, எஸ்.வி. சாலையில் உள்ள அபய ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து அபய ஆஞ்சனேய சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி நடைபெற்று, வெற்றிலை, துளசி, வடை மாலை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அபய ஆஞ்சனேயரை வழிப்பட்டனா்.
இதேபோல நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் வே.முத்தம்பட்டியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தாா். அதேபோல இலளிகம் கல்யாண ஆஞ்சனேயா் கோயில் , ஆட்டுக்காரன்பட்டி வீர ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேய சுவாமி அருள் பாலித்தாா். தருமபுரி மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலக வளாகத்தில் வீர ஆஞ்சனேயா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.