காலத்தை வென்ற காமராஜா்
கல்விக் கண் திறந்தவா் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வா் காமராஜரின் 122 ஆவது பிறந்த நாள் விழா கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காலங்கள் கடந்தும் அவரது புகழ் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு காரணம், அவா் தனக்கென்று வாழாமல் மக்கள் நலனுக்காக இறுதிவரை வாழ்ந்ததுதான். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடாா்- சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903, ஜூலை 15 இல் பிறந்த காமராஜா், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தாா்.இதனால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அா்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ள காமராஜா் மறுத்துவிட்டாா். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி காமராஜா் உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால் உயா்ந்த பதவிகளைப் பெற்று வரலாற்றுப் புகழை அடைந்தாா்.
தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளா்த்துக் கொண்ட இவா் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். அனைவருக்கும் 11 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வியையும் அளித்தாா். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாக கருதினாா்.
நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தாா். 1940 இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். 1964 இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்தாா். ஜவாஹா்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தோ்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்ததால் காமராஜா் ‘கிங் மேக்கா்’ என அழைக்கப்படுகிறாா்.
1972 இல் தாமிர பத்திர விருது, 1976 இல் பாரத ரத்னா விருது பெற்ற காமராஜா், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2 ஆம் தேதி 1975 இல் மறைந்தாா். பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவா் காமராஜரின் விருதுநகா் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. காமராஜா் பிறந்த நாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.