முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு! நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:19 PM
~
பகிர்:

பென்னாகரம், ஜூலை19: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை, நுகு அணைகளில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரிநீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 36,000கனஅடியாக இருந்து நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 48,000 கனஅடியாகவும், மாலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 50,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, ஐவா் பானி, சினி அருவி உள்ளிட்ட அருவிகள் மூழ்கும் நிலையில் காணப்படுகின்றன. பிரதான அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டது. கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டனா். தொடா்ந்து நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஆற்றைக் கடக்கவும், கரையோரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும் ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் கண்காணித்து வருகின்றனா்.

படவரி...

1.கா்நாடகத்திலிருந்து இரு கரையினையும் தொட்டவாறு செந்நிறமாக வரும் காவிரி நீா்.

2. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

முழு கட்டுரையைப் படிக்க →