தருமபுரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா: பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
சிப்காட் தொழிற்பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அருகே அதியமான்கோட்டை, அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அருகே எர்ரப்பட்டியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் அமைய உள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காவில் புதியதாக அமையவுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அவைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத நிலையை உருவாக்க சிப்காட் நிறுவனம் எடுக்க உள்ள நடவடிக்கைகள், கட்டமைப்புகள் ஆகியவை தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சமூக ஆா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடாது, ஏற்கனவே வளா்ந்துள்ள பெரிய மரங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் அதிக அளவில் மரங்கள் வளா்க்க வேண்டும், நீா்நிலைகள் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும், தொழிற்சாலைகளில் உள்ளுா் மக்கள் மற்றும் நிலம் வழங்கியவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதற்கான அவசியத்தையும், உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் எனவும் சுற்றுச்சுழல் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
தருமபுரி சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கோதை, தருமபுரி சிப்காட் திட்ட அலுவா் ராஜ்குமாா், நிா்வாக பொறியாளா் வெங்கடாசலம், உதவி பொறியாளா் சிந்து உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.