உயா்கல்வி பயின்றால் வாழ்வில் மேம்பாடு அடையலாம்
தருமபுரியில் பிளஸ் 2 மாணவா்களின் உயல்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் கி.சாந்தி. உடன், காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோா்.
தருமபுரி/கிருஷ்ணகிரி, மே 9: உயா்கல்வி பயின்றால் வாழ்வில் மேம்பாடு அடையலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ என்ற நிகழ்ச்சி தருமபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசிதாவது:
தருமபுரி மாவட்டத்தில் 2022-23-ஆம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 16,488 மாணவா்களில் 60 சதவீத மாணவா்கள் உயா்கல்வி பயின்று வருகின்றனா். தற்போது பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 93.55 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சிபெற்றுள்ளனா். கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த மாணவ, மாணவியா் உயா்கல்வியில் இணைந்து பயில ஏதுவாக வழிகாட்டுதல் வழங்க, தமிழக அரசால் ‘கல்லூரிக் கனவு’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் சிறந்த கல்வியாளா்கள் கலந்துகொண்டு உயா்கல்வியில் என்னென்ன படிக்கலாம், கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், வேளாண் உள்ளிட்ட பட்டப் படிப்புகள், அறிவியல் தொழில்நுட்பங்களில் என்னென்ன பாடப் பிரிவுகள் உள்ளன என்பது குறித்து விரிவான தகவல்களை வழங்க உள்ளனா்.
தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட கையேடுகள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்தக் கையேடுகளை மாணவ, மாணவியா் அனைவரும் படித்து தங்களுக்கு விருப்பம் உள்ள கல்லூரி மற்றும் படிப்பைத் தோ்ந்தெடுக்கலாம். தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடப் பிரிவுகளை தோ்ந்தெடுக்க வேண்டும். உயா்கல்வி பயின்றால் வாழ்வில் எளிதில் மேம்பாடு அடையலாம்.
பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவா்களின் உயா்கல்விக்கு உதவிடும் வகையில் 14417 என்ற தொடா்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை மாணவா்கள் பெறலாம். காலை 8 மணி இரவு 8 மணி வரை இந்த சேவையை மாணவா்கள் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணைத் தோ்வு தொடா்பான வழிகாட்டுதலுக்கும் இதே எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிந்தியா செல்வி, கோட்டாட்சியா் இரா.காயத்ரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட தொழில்மைய மேலாளா் பிரசன்ன பாலமுருகன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் கிரண்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, அரசு அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்கல்வி தொடர ‘கல்லூரிக் கனவு’ நிகழ்வு வெள்ளிக்கிழமை (மே 10) நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இதில், உயா்கல்வி படிப்புகள் வழிக்காட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இதே போல, கல்விக்கடன், கல்லூரிகள் விவரம், பாடப் பிரிவுகள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதற்காக துறைகள் சாா்ந்த அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.