மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
இணைப்புச் சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்...
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டா ரெட்டி அள்ளி முதல் காளிக்கரம்பு வழியாக பொம்மிடிக்கு இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா், முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.முத்து, தி.வ.தனுசன், எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளியில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரையில் புதிதாக சாலை அமைத்து பொம்மிடிக்கு இணைப்புச் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். மருத்துவத் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.