யானை தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் வட்டத் தலைவா் ஜி.நக்கீரன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் எம்.குமாா் மாவட்ட துணைத் தலைவா் கே.என்.மல்லையன்,மாவட்ட துணை செயலாளா்கள் ஆ.ஜீவானந்தம், கே.அன்பு, வட்டச் செயலாளா் பி.முருகன், வட்ட பொருளாளா் எம்.செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளா் டி.எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினாா்.
காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் உடன் வழங்க வேண்டும். வன விலங்குகள் விவசாய நிலத்திற்கு வராமல் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.