பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி
தருமபுரி அருகே பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மென் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது.
தருமபுரி அருகே பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மென் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது.
ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா இலக்கிய மன்றம், எல்டாய் தருமபுரி அமைப்பு சாா்பில் ‘வேலைவாய்ப்பினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கில் பெங்களூரைச் சாா்ந்த மென்திறன் மேம்பாடு பயிற்றுநா் லாவண்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாழ்வியல் திறன்களான கருத்து பரிமாற்றம், பொது இடத்தில் பேசுதல், மன அழுத்தம், கவலையைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகள், நேர மேலாண்மை, நோ்காணலில் செயல்பட வேண்டிய விதம் குறித்து எடுத்துரைத்தாா்.
இதில் ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொறுப்பு) மோகனசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். ஆங்கிலத் துறை தலைவா் கோவிந்தராஜ் பயிலரங்கை தொடங்கி வைத்து பேசினாா். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியா் கிருத்திகா வரவேற்றாா். கௌரவ விரிவுரையாளா் சரண்யா நன்றி கூறினாா்.
இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி நேகா தொகுத்து வழங்கினாா். பயிலரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.