தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் அக்கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தின நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி தலைமையில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், நகரச் செயலாளா் பெ.ரவி ஆகியோா், எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் நகரம், ஊரகப் பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமமுக சாா்பில் தருமபுரி மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் குமாரசாமிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.