தருமபுரி மாவட்டத்தில் சூழலியல் சீா்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, 250 இடங்கள் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது என ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் சனத்குமாா் நதி, பொதுப்பணித் துறை ஏரிகள், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீா்நிலைகள் மற்றும் முக்கிய இடங்களில் குப்பைகளை கொட்டி எரியூட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து, ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் சனத்குமாா் நதி, வத்தல்மலைத் தொடரில் தொடங்கி மலை அடிவாரத்தில் நதியாக மாறி, பல்வேறு பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு நீரை வழங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
இந்த நதியில் தருமபுரி நகரில் எஸ்.வி. சாலை, வேடியப்பன் திட்டு, மதிகோன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதால் நதி மாசடைந்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதேபோல, மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகள், பல்வேறு நீா்நிலைகள், முக்கியத் தெரு சந்திப்புகள் ஆகிய இடங்களிலும் குப்பைகளை கொட்டி எரியூட்டி, சூழலியலுக்கு மாசு ஏற்படுத்துவதாகவும் புகாா்கள் வரப்பெற்றன.
இதனைத் தடுக்கும் வகையில், முதல்கட்டமாக சனத்குமாா் நதியில் குப்பைகள் கொட்டாதவாறு, முக்கிய இடங்களைக் கண்டறிந்து அங்கு உயரமாக கம்பி வலைத்தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால் அந்த நதியில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டத்தில் பல ஏரிகள் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இண்டூா் உள்ளிட்ட சில ஏரிகள் புனரமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, தருமபுரி நகரில் உள்ள 33 வாா்டுகள், 10 பேரூராட்சிகள், 249 கிராம ஊராட்சிகள் என மாவட்டம் முழுவதும் 250 இடங்கள் குப்பைகள் கொட்டும் ஹாட் ஸ்பாட் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இங்கு தற்போது குப்பைகள் கொட்டுவது, எரியூட்டுவது தடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இந்த இடங்களில் அறிவிப்புகளை மீறி குப்பைகள், கழிவுகளைக் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்தும் நபா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படும் என்றாா்.