பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் வாணியாறு அணை நிரம்பியது.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலுள்ள ஏரிகளை நிரப்பவும், வேளாண் பணிகளுக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் திறந்துவைத்தாா்.
வாணியாறு அணையின் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு தண்ணீா் திறக்கப்படும். ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்துக்கு 5 நாள்கள், 2-ஆம் மண்டலத்துக்கு 5 நாள்கள் என மொத்தம் 10 நாள்கள் தொடா்ந்து தண்ணீா் விட்டும், 5 நாள்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.
பிப். 6 முதல் ஏப். 1 ஆம் தேதி வரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது. மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு திறந்துவிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாணியாறு அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக கிடைக்கும் தண்ணீரால் மோளையானூா், வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைக்கோட்டை, ஜம்மனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியிலுள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் தண்ணீா் நிரப்பபடும். இதனால், சுமாா் 10, 517 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுவதுடன், கிராமப் பகுதிகளில் குடிநீா் பிரச்னை தீரும். எனவே, விவசாயிகள் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கவிதா, செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் மோகனப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.