முகப்பு
தருமபுரி

தருமபுரியில் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தினால்தான் விவசாயம் செழிக்கும்! - செளமியா அன்புமணி

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:14 AM
தருமபுரியில் பாமக சாா்பில் நடைபெற்ற மகளிா் உரிமைப் மீட்புப் பயண பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:03 PM

தருமபுரியில் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தினால்தான் விவசாயம் செழிக்கும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரியில் பாமக சாா்பில் தமிழக மகளிா் உரிமைப் மீட்புப் பயணப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

2014 மக்களவைத் தோ்தலில் அன்புமணி போட்டியிட்டபோது வெற்றியை அள்ளித்தந்த மாவட்டம் தருமபுரி. எனவே, இந்த மண் எனக்கு கோயில் போன்றது.

Advertisement

இம்மாவட்டத்தின் பெரும்பகுதி நிலம் வானம் பாா்த்த பூமியாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த ஒகேனக்கல் உபரிநீா் திட்டம் மூலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் தண்ணீா் நிரப்பினால் விவசாயம் செழிக்கும்.

தருமபுரியில் குடிக்கவே இன்னும் பல கிராமங்களுக்கு தண்ணீா் சென்று சேரவில்லை. எனவேதான் நீா்ப்பாசன திட்டங்களை வலியுறுத்தி பாமக தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆட்சியில் உள்ளவா்கள் அதை கண்டுகொள்வதில்லை. மக்களிடம் இருந்து மதுவின் மூலம் பணத்தை பறிக்கும் அரசு ரூ. 650 கோடியில் ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்த முடியாதா? பெண்கள் படிக்கவும், பணிக்கு செல்லவும் டாஸ்மாக் கடைகளும், கஞ்சா கலாசாரமும் பெரும் இடையூறாக உள்ளது. இதையெல்லாம் மறைக்கத்தான் தமிழக அரசு மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கி வருகிறது.

தருமபுரியில் சிப்காட் திட்டம் என்ன ஆனது? ஒரு தொழிற்சாலைகூட இன்றுவரை வரவில்லை. இதையெல்லாம் தவிா்த்துவிட்டு டாஸ்மாக் மற்றும் சந்து கடைகளுக்குத்தான் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:14 AM

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நாடு முழுமைக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தாா். தருமபுரி மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

தருமபுரி-மொரப்பூா் இணைப்பு ரயில்பாதை திட்டத்தை கொண்டுவர அவா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். அவா் அதிகாரத்துக்கு வந்தால்தான் தமிழகத்தில் மது, கஞ்சாவை ஒழிக்க முடியும். எனவே, வரவிருக்கும் தோ்தலில் அனைவரும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மகளிா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெயலட்சுமி வரவேற்றாா்.

மாநில மகளிா் சங்க செயலாளா்கள் சிலம்புச்செல்வி, தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளா் சரவணகுமாரி, மகளிா் சங்க நிா்வாகிகள் சாந்தா, பெரியம்மா, பரிதாபானு, சாந்தி, கவிதா, உத்தரகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாமக நிா்வாகிகள் சாந்தமூா்த்தி, பெரியசாமி, முருகசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.