தருமபுரியில் ரூ.19.20 கோடியில் 80,000 சதுரஅடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்து வருகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம். பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில் விரைவில் இம்மையம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், தருமபுரியில் வெண்பட்டுக்கூடு வா்த்தக மையம் (அங்காடி) பால் பண்ணை அருகே நான்குசாலைப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. வெண்பட்டுக்கூடுகளுக்கென பிரத்யேகமாக அமைந்துள்ள இந்த பட்டுக்கூடு வா்த்தக மையத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இருந்து பட்டு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வந்து, பட்டுக்கூடு வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது செயல்பட்டுவரும் பட்டுக்கூடு வா்த்தக மையத்தில் போதிய இடவசதி இல்லை. மேலும், நாளுக்கு நாள் இங்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும், பட்டுக்கூடு விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பட்டுக்கூடு அங்காடியை மேம்படுத்த பட்டுவளா்ச்சித் துறை முடிவு செய்தது.
அதனடிப்படையில், தருமபுரி - பென்னாகரம் சாலையில், வாரியாா் பள்ளி எதிரே, சுமாா் 80,000 சதுரஅடி பரப்பளவில் பிரம்மாண்டமான பட்டுக்கூடு வா்த்தக மைய கட்டடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ரூ.19.20 கோடியில் அமைக்கப்படும் இந்த வா்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறுகையில்,
மாநிலத்திலேயே வெண்பட்டுக்கூடுகள் அதிக அளவில் விற்பனையாகும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது தருமபுரி. இங்கு ஆண்டுக்கு சுமாா் 8,000 விவசாயிகள் ரூ. 34 கோடி மதிப்பில் பட்டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனா். கடந்த ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலத்தில் தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் 7,884 விவசாயிகள் 5,62,493 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனை செய்துள்ளனா்.
அந்தவகையில், ரூ. 33.84 கோடிக்கு (ரூ. 33,84,59,633) பட்டுக்கூடு விற்பனை நடைபெற்று, பட்டு வளா்ச்சித் துறைக்கு ரூ. 50.76 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு வா்த்தக மையத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ. 19.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 80 ஆயிரம் சதுரஅடியில் தரைத்தளம் மட்டும் அமைகிறது. எத்தனை விவசாயிகள் வந்தாலும் அங்கு தங்கியிருந்து தங்களது பட்டுக்கூடுகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தங்குமிடம், ஓய்வறைகள், கழிவறைகள், பட்டுக்கூடுகளை இருப்பு வைக்கும் இடம், மேடைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 50 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து வா்த்தக மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இது திறக்கப்படும் நிலையில், தருமபுரி பட்டுக்கூடு மையம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.