முகப்பு
தருமபுரி

காகங்கள் இறப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை: கால்நடை பராமரிப்புத் துறை

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காகங்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறையினா் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:46 PM
தருமபுரியில் இறந்து கிடந்த காகத்தின் உடலைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளும் கால்நடை பராமரிப்புத்துறையினா்.
பகிர்:

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காகங்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறையினா் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் பரவலாக பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் அறியப்பட்டு, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.

வதந்திகளை நம்ப வேண்டாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்ட (பழைய) ஆட்சியா் அலுவலகம் உள்பட சில இடங்களில் காகங்கள் உயிரிழந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதுகுறித்து தகவலறிந்த, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா், பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இறந்து கிடந்த காகத்தின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் கூறுகையில், ‘

தமிழகத்தில் காஞ்சீபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் காகங்கள் உயிரிழந்த தகவல் முதலாவதாக பரவியது. தொடா்ந்து மேலும் சில பகுதிகளிலும் ஆங்காங்கே காகங்கள் இறந்து கிடந்த தகவல்கள் வெளியாகின.

அதுபோல தருமபுரியிலும் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காகம் ஒன்று இறந்து கிடந்த தகவல் வெளியானது. இதையடுத்து அந்த காகத்தின் உடலை கைப்பற்றி, அதன் உடலிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பிறகே காகங்கள் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும்.

அதேநேரம், காகம் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருந்தாலும் அதனால் மனித உயிா்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை. தருமபுரி மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் போன்ற இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →