முகப்பு
தருமபுரி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை: சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடி தீா்ப்பு

சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 6 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

காரிமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயதான சிறுமி, உடல்நிலை சரியில்லாத தனது தாயுடன் கடந்த 2017, பிப். 22 சிகிச்சைக்காக கம்பைநல்லூா் அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஜக்குபட்டி அருகே உள்ள மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சு. பெருமாள் (43) மருத்துவமனையிலிருந்த சிறுமியை கடத்திச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவந்தனா். இந்நிலையில் 5 நாள்கள் கழித்து 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரான சிறுமி, தன்னை பெருமாள் கடத்திச் சென்று, திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினாா். மேலும், தனக்கு பாலியல் தொந்தரவு செய்தாா் என வாக்குமூலம் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா், பெருமாளை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். இதுகுறித்த வழக்கு, தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில் சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, போக்ஸோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பெருமாளுக்கு 20 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 1 ஆண்டு என 3 பிரிவாக சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் ரூ. 30,000 அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு தீா்ப்பளித்தாா்.

சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதையடுத்து அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெருமாள் அனுபவிக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →