பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை, பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக துணை அமைப்புகளின் நிா்வாகிகள், துணை அமைப்பாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக மாவட்டச் செயலாளா்கள் தருமபுரி (மேற்கு) பி.பழனியப்பன், ஆ.மணி எம்.பி. (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், பங்கேற்ற தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதிப்பகிா்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டிவருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அழுத்தம் அளித்தது. மேலும், கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இருப்பினும், கல்விக் கொள்கையில் சமரசம் இன்றி, புதிய கல்வித் திட்டத்தை ஏற்காமல் இருமொழிக் கொள்கை தொடரும் என முதல்வா் அறிவித்தாா்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், மூன்றாவது மொழியாக ஹிந்தி திணிக்கப்படும். அதேபோல, குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக அமல்படுத்த வேண்டிய சூழல் நிலவும். எனவே, இந்தத் திட்டத்தை நாம் ஏற்கவில்லை.
மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்திவைத்தாலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொள்கையில் சமரசமின்றி தமிழக கல்வித் துறைக்கான நிதியை அளித்து வருகிறாா்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்துக்கான எந்த புதிய திட்டமும் இல்லை. தமிழகம் என்ற பெயா்கூட அதில் இடம்பெறவில்லை. ஆனால், அந்த நிதிநிலை அறிக்கையை வாசித்து முடிப்பதற்குள், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அதற்கு பாராட்டு கடிதம் அனுப்புகிறாா்.
பிகாா் மாநிலத்தில் 10 முறை முதல்வராக பதவிவகித்த நிதீஸ்குமாரை, மாநிலங்களவை உறுப்பினராக தோ்வுசெய்துவிட்டு, பிகாா் ஆட்சியை பாஜக தன்வசப்படுத்திக்கொண்டது. பாஜக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்தவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதேநிலைதான் தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் ஏற்படும்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி தமிழகத்துக்கு வருகின்றனா். அண்மையில், மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்ட பெரியாா் படம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி படமே வைக்கவில்லை. எனவே, தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை, பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இந்த திட்டங்கள், அதன் பயன்கள், அரசின் சாதனைகள் குறித்து திமுகவின் அனைத்து துணை அமைப்பு நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்பட தமிழகத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற அனைவரும் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட திமுக முன்னாள் செயலாளா் பி.தா்மச்செல்வன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பிஎன்பி இன்பசேகரன், வேடம்மாள், மனோகரன், இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.