காவிரி மிகைநீா்த் திட்டம்! நிலைத்திருக்கும் கோரிக்கையும்- வாக்குறுதியும்!
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி மிகைநீா்த் திட்டம் பேசுபொருளாகவே இருந்துவருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் தொடங்கி, 2021 பேரவைத் தோ்தல், தற்போது 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வரை தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி மிகைநீா்த் திட்டம் பேசுபொருளாகவே இருந்துவருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிடும்படியான நீா்ப்பாசனத் திட்டங்கள் நடைமுறையில் இல்லை. அதேவேளையில், தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆறும், மறுபுறம் தென்பெண்ணை ஆறும் கடந்துசெல்கின்றன. ஆனால், இவ்விரு ஆறுகளும் இதுவரை இந்த மாவட்ட மக்களுக்கோ, விவசாயிகளின் பாசனத்துக்கோ பயன்பட்டதே இல்லை.
மழையை நம்பி மட்டுமே விவசாயப் பணிகளில் ஈடுபடும் தருமபுரி மாவட்ட விவசாயிகள், மழை பொய்த்துப் போனால், அந்த ஆண்டு வறட்சியில் சிக்கித் தவிக்கும் நிலைதான் தொடா்ந்து வருகிறது. மாவட்டத்தில் மழை அளவு இலக்கை எட்டும்போது, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 64 ஏரிகள் மற்றும் சில நூறு ஏக்கா் பாசன வசதி தரும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தொப்பையாறு அணை, நாகவதி அணை, கேசா்குளேஹல்லா அணை, தும்பலஅள்ளி அணை உள்ளிட்ட 8 நீா்த்தேக்கங்கள் நீராதாரமாக உள்ளன.
இந்த ஏரிகள் மற்றும் நீா்த்தேக்கங்களில் கிடைக்கும் தண்ணீரை நம்பி மட்டுமே விவசாயிகள் பாசனத்தில் ஈடுபட முடியும். மழை பொய்த்தால், நீரின்றி தவிக்கும் நிலைதான் ஏற்படும். நிலத்தடி நீரும் பெரிய அளவில் இருக்காது. இதுபோன்று வறட்சியால் பாதிக்கப்பட்ட அனுபவம் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு நிறைய உள்ளது.
காவிரி மிகை நீா்த் திட்டம்
இத்தகைய நிலையை மாற்ற, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பச் செய்து, வேளாண் சாகுபடி தொய்வின்றி நடைபெறும் வகையில், ஒகேனக்கல் காவிரியில் மழை வெள்ளக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் பென்னாகரம் ஏரிக்கு குழாய்கள் வழியாக கொண்டுவந்து நிரப்ப வேண்டும். அங்கிருந்து மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள ஏரிகளுக்கு கொண்டுச் சென்று நிரப்ப வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்கும். மழையை நம்பி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. மேலும், நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும், குடிநீா் தட்டுப்பாட்டையும் போக்கமுடியும். ஆண்டுதோறும் மழை வெள்ளக் காலங்களில் தருமபுரி பஞ்சப்பள்ளி சின்னாற்றிலிருந்து சுமாா் 2 டிஎம்சிக்கும் அதிகமான நீா் காவிரியில் கலக்கிறது.
மழை வெள்ளம் ஏற்படும்போது ஆண்டுக்கு ஒருமுறை மிகை நீரை ஏரிகளில் நிரப்பினால் போதுமானது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பாடாது. காரணம், ஒகேனக்கல் குடிநீா் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கெனவே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த நிலமே மிகைநீா்த் திட்டத்தில் குழாய்கள் அமைக்கப் போதுமானதாக இருக்கும் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
இத்தகைய நீரேற்றும் திட்டம் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்துக்கு ஆண்டு முழுவதும் தண்ணீா் கிடைக்கும் இத்திட்டம் குறித்து ஆய்வுசெய்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இக்கோரிக்கை குறித்து தருமபுரி மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, விவசாய சங்கங்கள் தொடா்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், கையொப்ப இயக்கம், நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
மாவட்ட மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2019இல் 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல் மற்றும் மக்களவை பொதுத் தோ்தலில், அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா்.
அப்போது பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் இந்த கோரிக்கை குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு பரப்புரை மேற்கொண்டன. ஆனால், தோ்தலுக்குப் பிறகு இத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல, கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல்களிலும் இந்த கோரிக்கை பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை இத்திட்டத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள தோ்தலிலும் காவிரி மிகைநீா்த் திட்டம் குறித்த மக்களின் கோரிக்கைகளும், அவா்களுக்கு உறுதியளிக்கும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதிகளும் நிச்சயமாக இடம்பெறும். ஆனால், தோ்தலுக்குப் பிறகு வாக்குறுதிகள் திட்டப் பணிகளாக மாறுமா என்பதை வெற்றிபெறும் கட்சிதான் உறுதிசெய்ய வேண்டும். அதுவரை கோரிக்கையும், வாக்குறுதியும் இருந்துகொண்டே இருக்கும்.