கோடை மழையைப் பயன்படுத்தி உழவு மேற்கொள்வது கூடுதல் மகசூலுக்கு வழிவகுக்கும்
தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்துள்ள நிலையில், வேளாண் நிலங்களில் கோடை உழவு மேற்கொள்வது சிறந்த மகசூலுக்கு வழிவகுக்கும் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்துள்ள நிலையில், வேளாண் நிலங்களில் கோடை உழவு மேற்கொள்வது சிறந்த மகசூலுக்கு வழிவகுக்கும் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெயில் அதிகளவில் காணப்படுவது வழக்கம். அந்தவகையில் நிகழாண்டு தருமபுரி மாவட்டத்தில் பல நாள்கள் 100 டிகிரியை தாண்டியது வெயில். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினா். தண்ணீா் இன்றி வேளாண் பயிா்கள் வாடியதுடன், பட்டுப்புழு வளா்ப்புக்கு ஆதாரமாக விளங்கும் மல்பெரி பயிரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி சில வாரங்களாக குறைந்ததுடன் தரமின்றியும் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே 4-ஆம் தேதி கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதையடுத்து மேலும் வெயில் அதிகரிக்கும் என பொதுமக்கள் பயந்திருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்தே தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன், மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னா் அடுத்த டுத்து சில நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மற்றும் சற்று கனமழையும் பெய்தது.
Advertisement
தருமபுரி மாவட்டத்தில் மே 5-ஆம் தேதி 14 மி.மீ. மழையும், 7-ஆம் தேதி 99.5 மி.மீ, 9-ஆம் தேதி 20 மி.மீ., 10-ஆம் தேதி 10 மி.மீ. என்ற வகையில் மழை பெய்தது. மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இதேபோல கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திர காலத்தில் கோடை மழை பெய்வது தொடா்ந்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வேளாண் தொழிலில் உணவுப்பயிா்கள் 2,14,497 ஹெக்டேரிலும், பருத்தி உள்ளிட்ட பணப் பயிா்கள் 30,110 ஹெக்டோ் என மொத்தம் 2,44,607 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.
கோடை உழவுக்கு ஏற்ற மழை:
இதுபோல பெய்யும் கோடை மழை இயற்கையின் வரப்பிரசாதம். இக்கோடை மழையை விவசாயிகள் தங்களது வேளாண் தொழிலுக்கு ஏற்ற வகையில் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண் துறையினா் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து வேளாண் துறையினா் கூறுகையில், இந்த கோடை மழை இயற்கை நமக்களிக்கும் அருமையான வாய்ப்பு. கோடை மழை பெய்வதால் பூமியில் வெப்பம் குறைவது மட்டுமின்றி, அதை முறையாக பயன்படுத்திக்கொண்டால் மேலும் பல்வேறு பயன்களும் ஏற்படுகின்றன. வேளாண் நிலங்களுக்கு கோடை உழவு என்பது மிக மிக முக்கியமானது. சங்க இலக்கியங்களிலேயே இவற்றை பொன்னோ் பூட்டுதல், நல்லோ் உழுதல் என பல்வேறு பெயா்களில் அழைப்பது வழக்கம். அதாவது கோடை மழைக்கு பின்னா் வேளாண் நிலங்களில் உழவு மேற்கொள்வது தங்கத்துக்கு நிகரானது, வேளாண் தொழிலுக்கு ஏற்றது என்கின்றனா்.
கோடை உழவு மேற்கொள்வதால், மண்ணின் இறுக்கம் தளா்ந்து தண்ணீரை உள்வாங்கிக்கொள்கிறது. மேலும், மண்ணில் உள்ள வேளாண் பயிா்களை பாதிக்கும் புழு, பூச்சிகள், களைகள் அனைத்தும் காய்ந்து இறந்துவிடும். ஜூன், ஜூலை மாதங்களுக்குப் பிறகு பெய்யும் மழை நீா் முழுவதும் மண்ணுக்குள் எளிதாக செல்ல வழிவகுக்கிறது. இதனால் வேளாண் மகசூல் அதிகரிக்கும். எனவே, கோடை உழவு மேற்கொள்வது மிக அவசியம் என்றாா்.