தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி தாய், மகள் சாவு
தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் துணி துவைக்கச் சென்ற தாய், மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் துணி துவைக்கச் சென்ற தாய், மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள காரண்டப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கச்சுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரியப்பா. இவரது மனைவி மாதேவிபாய் (30). இவர்களது பிள்ளைகள் லட்சுமி (13), மீனா (11), சம்பத் (8). மீனாவும், சகோதரி லட்சுமியும் தாய் மாதேவிபாயுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் செவ்வாய்க்கிழமை துணிகளை துவைக்கச் சென்றுள்ளனர். அங்கு துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது மீனா குட்டை நீரில் கால்களைக் கழுவியுள்ளார். அப்போது திடீரென அவர் குட்டைக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தாய் மாதேவிபாய் மகள் மீனாவைக் காப்பாற்றுவதற்காக குட்டை நீரில் குதித்துள்ளார். இதில் நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதைப் பார்த்த லட்சுமி அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தகவல் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு சென்ற ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, காவல் உதவி ஆய்வாளர் பட்டு ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும், தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் தாய் மாதேவிபாயின் உடலை மீட்டனர். சிறுமி மீனாவின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. மாதேவிபாயின் உடலைக் காவல் துறையினர் தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு உடல்களும் மீட்கப்பட்ட
பின்னர்தான் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீஸார் சமாதானம் செய்து மாதேவிபாயின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.