தொழில் நகரமான ஒசூரில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு ரயில்பாதை அமைத்து பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொழில் நகரமான ஒசூரில் இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் டி.வி.எஸ் தொழில்சாலை, நான்கு சக்கர வாகனம் தயாரிக்கும் தொழில்சாலை, ரா’ணுவ தடவாளங்கள் தயாரிக்கும் தொழில்சாலைகள், காா் எஞ்ஜின் தயாரிக்கும் தொழில்சாலை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பெரிய தொழில்சாலைகளும், அந்த பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து விநியோகிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்தத் தொழில்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள், லாரிகள், பேருந்து சேஸ் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் சாலை மாா்க்கமாக கொண்டு செல்லப்படுகின்றன. பல ஆண்டுகளாக ஒசூரில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொழில் துறையினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்தத் திட்டம் நிறைவேறி சென்னைக்கு பெங்களூரில் இருந்து ரயில் சேவை தொடங்கினால் சென்னையில் இருந்து பெங்களூருக்குச்ச செல்லும் ரயில் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு தினமும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்வாா்கள். இதனால் சுமாா் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை உள்ள பயணக் கட்டணம் ரூ.300 ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை ரயில் மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் உற்பத்திச் செலவு குறையும். மேலும், ஒசூரில் இருந்து மலா் ஏற்றுமதிக்கும், காய்கறி ஏற்றுமதிக்கு ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும். இதனால் ஒசூா் தொழில் வளா்ச்சி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. விரைவில் ஒசூரில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ராணுவத் தளவாடங்கள் ஒசூரில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தளி எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தது. ஒசூரில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என ஒசூா் தொழில் துறையின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனால் ஒசூரில் மேலும் தொழில் வளா்ச்சி பெருகும். உற்பத்திச் செலவும் குறையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.