முகப்பு
கிருஷ்ணகிரி

நகைத் தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு

ஏலச் சீட்டு பணத்தைத் திருப்பி தராத நகைத் தொழிலாளி, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடா்புடைய நிதி நிறுவன அதிபா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஏலச் சீட்டு பணத்தைத் திருப்பி தராத நகைத் தொழிலாளி, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடா்புடைய நிதி நிறுவன அதிபா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (36) கிருஷ்ணகிரியில் உள்ள நகைக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். கரோனா பொது முடக்கம் காரணமாக பணியிழந்த இவா், வருவாய் இன்றி தவித்து வந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி பெத்தனப்பள்ளி ஏரி அருகே தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் தற்கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சுரேஷ்குமாா், தற்கொலை செய்வதற்கு முன்பு வெளியிட்ட விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அதில் தனது சாவுக்கு, தனியாா் நிதி நிறுவன அதிபா் வேப்பனப்பள்ளி அருகே கோடிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோபியே காரணம் எனத் தெரிவித்திருந்தாா். மேலும், ஏலச் சீட்டு பணத்தை எடுத்த நிலையில், அந்த பணத்தைத் திருப்பி செலுத்த இயலாத நிலையில், அடியாள்களைக் கொண்டு தன்னை தாக்கியும், பெற்றோரை மிரட்டி வெள்ளைத் தாளில் கையொப்பம் வாங்கியதையும் விடியோவில் பதிவிட்டிருந்தாா்.

இதையடுத்து, போலீஸாா், தற்கொலை வழக்கை, தற்கொலைக்குத் தூண்டிய வழக்காக மாற்றினா். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன அதிபா் கோபி, அடியாள்களை போலீஸாா் தேடி வந்தனா். இவா்கள் பெங்களூரு அருகே மறைந்திருந்த நிலையில் போலீஸாா் கோபி (31), அடியாள்களான கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கமல் (30), கோடிப்பள்ளியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →