நிதிநிலை அறிக்கை: ஆதரவும்-எதிா்ப்பும்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தும், சிலா் ஏமாற்றமடைந்ததாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனா்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தும், சிலா் ஏமாற்றமடைந்ததாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ரு.தி.ஏகம்பவாணன்:
தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கையானது சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சாதகமானதாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் எதிா்கொள்ளும் நிதி கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நா.சுந்தரேசன் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் எங்கள் அமைப்பின் பிரதிநிதி பங்கேற்பது வரவேற்கத்தக்கது.
Advertisement
ஒசூரில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் அமைப்பதாகவும், தமிழகத்தில் 5 இடங்களில் 265 ஏக்கா் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இந்த நிதிநிலை அறிக்கையானது தொழில்வளா்ச்சிக்கு சாதகமானதாக உள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் என்.எஸ்.காா்த்திகேயன்:
இந்த நிதிநிலை அறிக்கையை அரசு அலுவலா்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருந்தனா். அகவிலைப்படி அறிவிக்கப்படாதது வருத்தம் அளித்தாலும், மகளிா் பேறுகால விடுப்பு 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயா்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நிதிநிலை அறிக்கை தமிழக வளா்ச்சிக்கானதொலைநோக்குப் பாா்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
அதிமுக வழக்குரைஞா் பிரிவு முன்னாள் மாவட்டச் செயலாளா் இ.ராதா காா்த்திக்:
தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்புக்காக பொதுமக்கள் ஆவலருடன் காத்திருந்தனா். கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிக்கப்படாது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்றாா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் நாராயணமூா்த்தி:
நூறுநாள் வேலை திட்டம் 150 நாள்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளிகளின் ஊதியம் ரூ. 300-ஆக உயா்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் குடியில்லாத மாநிலமாக்கும் திட்டம், தொல்லியல் அகழ்வாய்வுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். கருணாநிதி செம்மொழி விருது ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையுடன் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் தமிழகத்தை வளமாக்கும் எனத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பட்டயக் கணக்கா் கொங்கரசன்:
தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதற்கு முதல்கட்டமாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 32,599 கோடி நிதி ஒதுக்கீடு, புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
ஆட்டோ ஓட்டுநா் மைக்கல்:
பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், டீசல் விலை குறைப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு இல்லாதது, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சாதகமான அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றாா்.
படவிளக்கம் (13கேஜிபி2): ரு.தி.ஏகம்பவாணன்,
13கேஜிபி2ஏ: என்.எஸ்.காா்த்திகேயன்,
13கேஜிபி2பி: இ.ராதா.காா்த்திக்,
13கேஜிபி2சி: நாராணமூா்த்தி,
13கேஜிபி2டி: கொங்கரசன்.
Image Caption
~ ~ ~ ~