‘பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அதற்கான பெட்டியில் போட வேண்டும்’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அதற்கான பெட்டியில் போட வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அதற்கான பெட்டியில் போட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். மேலும், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மாநில எல்லைகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
எனவே, பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆகியன சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் முடிவு பெற்ற பின்னரே நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் மனுக்கள் பெட்டியில் போடலாம். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.