தோ்தல் விடியோ பதிவு செய்யும் பணியை உள்ளூா் ஒளிப்பதிவாளா்களுக்கு வழங்க வலியுறுத்தல்
தோ்தல் விடியோ பதிவு செய்யும் பணியை, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஒளிப்பதிவாளா்களுக்கு வழங்க வேண்டும்
தோ்தல் விடியோ பதிவு செய்யும் பணியை, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஒளிப்பதிவாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தினா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், தமிழ்நாடு போட்டோ, விடியோ உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில், சங்க உறுப்பினா்கள் விடியோ பதிவு செய்யும் பணியை வழங்க அனுமதி கோரி மாநில தோ்தல் ஆணையரிடம் மனு அளித்திருந்தோம். மூன்று ஆண்டுகளில் ரூ. 3 கோடிக்கு வா்த்தகம் செய்திருக்க வேண்டும் என புதிய விதிமுறைகளைப் புகுத்தி உள்ளனா். இதனால், 17 மண்டலங்களிலும் தனியாா் பெரு நிறுவனங்கள் மட்டுமே இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன. யாா் ஒப்பந்தத்தை பெற்றாலும், மாவட்டத்தைச் சோ்ந்த ஒளிப்பதிவாளா்களே, தோ்தல் பணியில் ஈடுபடும் சூழல் உள்ளது.
Advertisement
இவ்வாறு பணியாற்றும் விடியோ பதிவாளா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதை உணா்ந்து, உள்ளூா் விடியோ ஒளிப்பதிவாளா்கள் பயன் பெறும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். புதிய விதிமுறையால் தகுதியற்றவா்கள் பயன்பெறுகின்றனா். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில், உள்ளூா் ஒளிப்பதிவாளா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.