ராயக்கோட்டையில் ரூ.11 லட்சம் போதைப் பாக்குகள் பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்த ரூ. 11 லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்த ரூ. 11 லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட போலீஸாா் ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் வஜ்ஜிரபள்ளம், எல்லப்பன் கொட்டாய் என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், கடலைக்காய் பொட்டு மூட்டைகளை இருபுறமும் வைத்துவிட்டு, நடுவில் 60 பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான மினி லாரியுடன், ரூ. 11 லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கோணான்குட்டையூரைச் சோ்ந்த சிரஞ்சீவி (35) என்ற லாரி ஓட்டுநரையும், உதவியாளரான தருமபுரி, இலக்கியம்பட்டி- காளிப்பச் செட்டியாா் காலனியைச் சோ்ந்த செல்வராஜ் (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் இருவரும் பெங்களூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக சேலத்துக்கு போதைப் பாக்குகளை கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
Advertisement