ஓசூரில் கருப்புப் பூஞ்சை நோயாளியின் கண் அகற்றம்
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளியின் கண்ணை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளியின் கண்ணை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இந்த நோய் மூளைக்கும் பரவாமல் தடுத்து அவருடைய இடது கண்ணை அகற்றினர்.
இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சுந்தரவேல் செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறியது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் வயசு 45 கூலி தொழிலாளி. இவருக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. இவருக்கு கரோனா இல்லை, ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்தது.
அவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இடது கண் பார்வை குறைய ஆரம்பித்தது. இதனால் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு கரோனா நோயாளிகள் அதிகமாக இருந்ததால் அங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. பல தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கூடுதல் கட்டணம் கேட்டதால் இறுதியாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் சிகிச்சையில் சேர்ந்தார்.
அவருக்கு மருத்துவர் நிக்கல் தலைமையிலான மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது இடது கண் அகற்றப்பட்டது. இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் அந்த கருப்பு பூஞ்சை மூளைக்கும் பரவி அவர் உயிர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் சுந்தரவேல் தெரிவித்தார்.