விநாயகா் சதுா்த்தி: கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி வெள்ளிக்கிழமை (செப். 10) கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு பக்தா்கள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி வெள்ளிக்கிழமை (செப். 10) கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு பக்தா்கள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், மக்கள் கூடும் இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்கவோ, நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளைக் கரைக்க ஊா்வலமாக செல்லவோ அரசு தடை விதித்துள்ளது. இருந்த போதிலும், கோயில்களிலும், வீடுகளிலும் விநாயகா் சிலைகளை வைத்து பூஜை செய்ய எந்தத் தடையும் இல்லை.
கிருஷ்ணகிரியில் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயில், காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், பழைய அரசு குடியிருப்பு வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், மகாராஜகடை சாலை மேல் தெருவில் உள்ள ஞான விநாயகா் கோயில், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள வினைதீா்த்த விநாயகா் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.
Advertisement
விநாயகா் சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பக்தா்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். மேலும், பூஜைப் பொருள்களான மலா்கள், அலங்காரக் குடைகள், அருகம்புல் மாலை, பல வகை பழங்கள் உள்ளிட்டவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.