முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனைக்கு 4.16 ஏக்கா் நிலம் தானமாக வழங்கிய ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனம்

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு 4.16 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு 4.16 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அண்ணாசிலை பகுதியில் உள்ளது. மருத்துவமனைக்கு ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், மருத்துவமனைக்கு போதிய இடம் இல்லை. இந்த நிலையில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டால், அதற்கான இடத்தை வழங்குவதாக ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் அறிவித்தாா்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக தற்போது அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைப் பயன்பாட்டிற்காக மிட்டப்பள்ளியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திா் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான 4.16 ஏக்கா் நிலத்தை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் தமிழக அரசின் பெயரில் அரசின் பிரதிநிதியான, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பெயரில் தான பத்திரம் எழுதி, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவம் அவா்களிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, வே.சந்திரசேகரனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரித்து வருகின்றனா். ஏற்கனவே அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 10 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலத்தை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்காக இவா் தானமாக வழங்கியுள்ளாா்.

ஊத்தங்கரை பகுதியில் ஏராளமான அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டாா். ஊத்தங்கரையில் கணினி நூலகம், எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.