முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

'ரத்தினக் குவியல்...!'

மானுட சமூகத்தில் தோன்றிய எல்லா மார்க்கங்களுக்கும் மறை நூல்கள் உண்டு.

Updated On : 21 மார்ச், 2026 at 1:35 AM
கோப்புப்படம்
பகிர்:

மானுட சமூகத்தில் தோன்றிய எல்லா மார்க்கங்களுக்கும் மறை நூல்கள் உண்டு. அவை அந்தந்த மதங்களுக்கான வேத நூல்கள். அவற்றில் இறைவனைப் பற்றிய விளக்கங்களும் வழிபாட்டு முறைகளும் விவரிக்கப்படுகின்றன. இஸ்லாம் மார்க்கத்தின் மறை நூலான திருக்குர்ஆனில் பேசப்படும் கருத்துகள் ராணுவச் சட்டங்களைப் போல நின்று நம்பிக்கை கொண்ட இஸ்லாமியப் பெருமக்களை ஒரே நேர்க்கோட்டில் நடந்து செல்வதற்கு வழிகாட்டுகின்றன.

ஒழுக்கமும் நேர்மையும் நாணயமும் கொண்ட முழுமையான ஒரு மனிதனை உருவாக்கிக் காட்டுகிற ஒழுக்கக் கோட்பாட்டை திருக்குர்ஆன் தனது விழுமிய கருத்துகளால் விளக்கிப் பேசுகிறது. திருக்குர்ஆனை இறைச்சட்டம் என்று ஏற்றுக் கொண்டு விட்ட ஒரு முஸ்லிம் அணுவளவும் அதைவிட்டுப் பிறழாமல் வாழ முற்படுகிறபோது அவர் தன்னை அறியாமலே ஓர் ஒழுக்க சீலனாக உயர்ந்து விடுகிறார். இந்த ரசவாத வித்தை திருக்குர்ஆன் நிகழ்த்தும் அதிசயமாகத் திகழ்வதை நாம் பார்த்து வியந்து போகிறோம்.

பசித்திருந்தும் விழித்திருந்தும் நோன்புப் பெருநாளை நிறைவேற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மூன்று வகையான கடமைகள் இருப்பதாக மார்க்க அறிஞர்கள் சுருக்கமான மூன்று வரிகளில் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஒன்று... வணங்கி வாழ்வது-- இரண்டாவது வழங்கி வாழ்வது-- மூன்றாவது இணங்கி வாழ்வது..! நோன்புப் பெருநாளின்போது பள்ளி

வாசல் அல்லது பொதுவான திடல்களில் மக்கள் ஒன்று கூடித் தொழுகையை நிறைவேற்றுவது- வணங்கி வாழ்வது என்னும் வரிகளில் சொல்லப்படுகிறது. தங்கள் மீது கட்டாயமாக்கப்பட்ட ஏழைகளின் வரியை முறையாக எடுத்து அவர்களிடம் கொடுத்து விடுவது என்பது வழங்கி வாழ்வது என்னும் வார்த்தைகளில் பேசப்படுகிறது. மூன்றாவதாக, பெருநாளன்று ஒவ்வொரு சகோதரரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது என்பது சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் வளர்க்கிறது; எனவே, இதனை இணங்கி வாழ்வது என்னும் வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லுகின்றனர் சான்றோர்.

இந்த மூன்றையும் நிறைவேற்றுவதே பெருநாளின் நோக்கம் என்று சொல்லப்படுவதன் வழியாய் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையான கோட்பாடு என்பது இறைவனை வணங்குவதுடன் ஏழைகளுக்கு வழங்குவதும், ஏனைய சகோதரர்களோடு இணங்குவதும் என்கிற மூன்றே சித்தாந்தங்களில் இந்த மார்க்கத்தின் பெருமைக்குரிய நோக்கம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

என்ன விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள். இந்தப் பூமியில் நீங்கள் வாழும் வாழ்க்கைக்கான பரிசோ, தண்டனையோ அது மறுமையில் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்

படைத் தத்துவமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஐந்து வேளை தொழுவதைக் கட்டாயமாக்கிய மார்க்கம் தொழுத கையோடு 'ஏழைகளுக்கான நன்கொடைகளையும் கொடுத்து விடுங்கள்...!' என்று அறிவுறுத்துகிறது.

ஜக்காத் எனப்படும் இந்த ஏழைகளின் வரி, மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டிருப்பதை மிக முக்கியமான அம்சமாகப் பார்க்க வேண்டும். வெற்று அறிவுரையாக 'நன்கொடை கொடுங்கள்..!' என்று சொல்லி வைத்தால் மனிதர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் தவிர்த்து விடுவார்கள் அல்லது அதைப் பேருக்குச் செய்து விட்டு ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்... என்னும் இயல்பை உணர்ந்த திருக்குர்ஆன், கட்டாயமாக உங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்காக எடுத்துக் கொடுத்துவிட வேண்டும்...!' என்று கட்டளையிட்டி ருக்கிறது. இப்படி வற்புறுத்திச் சொல்லப்பட்டிருப்பதால் அந்த விதிமுறைகளில் இருந்து விலக முடியாமல் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் ரம்ஜான் பொழுதில் தங்கள் நன்கொடையைக் கொடுத்து மார்க்கக் கடமையை நிறைவேற்றி விடுகிறார்கள்.

இறப்பு வருகிற போது உங்கள் கையில் இருக்கும் எல்லாப் பொருளும் பயனற்றுப் போய்விடும். இடுப்பிலிருக்கும் அரைஞாண் கொடியைக் கூட அறுத்துப் போட்ட பிறகே மனிதர்களை மண்ணில் புதைப்பார்கள். ஆனால், மறுமையில் நீங்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் அதற்கான நாணயம் ஒன்று உங்கள் கையில் இருக்க வேண்டும். அந்த நாணயம் நீங்கள் இந்த உலக வாழ்வில் சம்பாதித்த நேர்மை-- நல்ல செயல்கள்!-- என்பவையே உங்களுக்கு மறுமையில் பயன்படும். இதை மிகத் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது இஸ்லாம் மார்க்கம்.

உங்கள் தலைக்கு மேலிருக்கும் வானத்தை நிமிர்ந்து பார்த்திருக்கிறீர்களா...? அதை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? யார் இந்த நீலப் படுதாவை நீட்டி விரித்தது... என்று வியந்திருக்கிறீர்களா? நீல வானமாக நீண்டு கிடக்கிற அந்த வானத்திற்குள்ளேதான் எத்தனை விதமான கோளங்கள்...! எத்தனை விதமான கோள்கள்...! மனிதனால் கண் கொண்டு பார்க்க முடியாத பிரகாசத்தோடு வீரியக் கதிர்கள் கொண்டு விண்ணில் உலா வரும் சூரியனை யாராவது வானத்தில் தூக்கி நிறுத்தி இருக்க முடியுமா...? அங்கே இரவில் வலம் வருகிற வட்ட நிலாவை யாராவது பொட்டல் வெளியிலே கொண்டு போய்க் கட்டி வைக்க முடியுமா? எண்ணிறந்த நட்சத்திரங்கள் விண் முழுக்க வாரிக் கொட்டப்பட்டி ருக்கின்றன; இப்படிக் கண்ணுக்குத் தெரிந்த கோளங்களைத் தவிர ஏராளமான கிரகங்கள் உள்ளே இருப்பதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

இத்தனை வகையான கோளங்களையும் உருளைகளையும் ஒரே நேர்க்கோட்டில் ஓட விட்டு நிருவாகம் செய்து கொண்டிருக்கிற அந்த நிர்மல சக்தி எது...? இது பற்றியெல்லாம் என்றைக்காவது நீங்கள் எண்ணியிருக்கிறீர்களா...? இந்தக் கோளங்கள் அனைத்தும் எப்படித் தூக்கி நிறுத்தப்பட்டன என்று உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி நீங்கள் கேட்டுக் கொண்டதுண்டா...? திருக்குர்ஆன் ஒற்றை வரியில் இதற்குப் பதில் சொல்கிறது.

எந்தத் தூண்களும் இல்லாமல் விதானம் அமைக்கப்பட்டிருக்கிற இந்த விந்தை உங்கள் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கருணை மிக்க கடவுள் என்னும் மாபெரும் சக்தியால் இழுத்துப் பிடிக்கப்பட்டிருக்கிறது; சத்தியம் என்னும் ஒற்றைத் தூணின் மீது தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது இந்த விண் மண்டலம் என்று விளக்குகிறது திருக்குர்ஆன். 'நாம் இந்த வானத்தைச் சத்தியத்தின் மீது தூக்கி நிறுத்தியிருக்கிறோம்...!' என்று பேசுகிறது குரான். இந்த வரியைப் படிக்கிற போது புரிந்து கொள்ளும் சக்தி படைத்த மனிதர்களுக்குப் புல்லரித்துப் போகும். ஆம்; உண்மை என்னும் தூணின் மீது கட்டப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்று விளக்குகிறது திருமறை வேதம். இதைத்தான் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்; இறைவா! எங்கள் இறைவா!' என்று வியந்து பாடினான் எட்டயபுரம் தந்த எங்கள் மகாகவி பாரதி.

உங்களில் யார் மிகவும் புத்திசாலி...? பட்டங்கள் பல பெற்றவரா...? ஆயிரக்கணக்கில் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறவரா..? இல்லை; இல்லவே இல்லை! 'எவர் தம்முடைய மனோ இச்சைகளை அடக்கி தனது மறுமை வாழ்வை அலங்கரிப்பாரோ அவரே உண்மையில் புத்திசாலி ஆவார்...!' என்று பேசுகிறார் பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள். மறுமை வாழ்வு என்பதை இஸ்லாம் இன்றியமையாத கோட்பாடாக வலியுறுத்தியிருக்கிறது. அங்கே நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்; உங்களுக்கான வினாத்தாள்கள் உலக வாழ்க்கையில் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் எழுதும் விடைத்தாள்கள் மறுமையில் திருத்தப்படுகின்றன...!' என்று பேசுகின்றனர் மார்க்க அறிஞர்கள்.

மறுமை வாழ்வில் உங்களுக்கான நீதிமன்ற விசாரணையில் நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி நிற்க வேண்டுமெனில் இந்த உலக வாழ்வில் உயரிய வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும். இங்கே செய்யப்படுகிற எல்லாம் செயல்களும் மறுமை வாழ்வில் விசாரிக்கப்படுகின்றன என்று எச்சரிக்கிறது இஸ்லாம்.

குத்துச்சண்டை போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் அடித்து வீழ்த்தும் மல்யுத்த வீரர்கள் மிகச் சிறந்த வீரர்களா? அவர்களை விடவும் மிகச்சிறந்த வீரர்கள் யார் தெரியுமா? யார் பொங்கி வரும் சினத்தை அடக்கிக் கொண்டு நிதானத்தை மேற்கொள்கிறார்களோ, அவர்களே அந்த மல்யுத்த வீரர்களைக் காட்டிலும் மகத்தான வீரர்கள் என்று பேசுகிறது திருக்குர்ஆன்.

கூடவே இன்னொரு செய்தியையும் இங்கே சேர்த்துச் சிந்திக்க வேண்டும்.

திருமறையில் ஓர் அற்புதமான கேள்வி கேட்கப்படுகிறது. 'இறைவன் யாரோடு இருக்கிறான் தெரியுமா? நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்கள் பக்கம் இருக்கிறான்...!' என்று பிரகடனப்படுத்துகிறது. உணர்ச்சிகளின் வழியே ஓடிப்போய் உள்ளத்தை ஓர் உலைக்களத்தைப் போல ஆக்கி விடாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் நெஞ்சுறுதி மிக்கவர்கள் இறைவனிடம் நெருங்கி விடுகிறார்கள் என்று பேசுகிற அற்புதத்தை நாம் பார்க்கிறோம். மனிதனை வடிவமைக்கிற அற்புதமான இடங்கள் இவை. மானுடத்தைச் செப்பம் செய்து நேர்வழியில் நடத்துகிற ஏராளமான ரத்தினக் குவியல்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்ற பெட்டகமாய்-- பேழையாய்-- பேரிலக்கியமாய்த் திருக்குர்ஆன் திகழ்வதை நாம் பார்க்கிறோம்.

'ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்: எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்..!' என்று பேசுகிறார் பெருமானார் நபிகள் நாயகம். அந்த அற்புதம் என்னும் கருத்துப் பெட்டகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கிற ஒவ்வொரு அறிவு ஜீவிக்கும் கை நிறைய நவரத்தினக் கற்களாக அள்ளக் கிடைக்கும். அதை உள்வாங்கி உணரும்போது நமக்குக் கிடைக்கும் முடிவு 'இது மதம் சார்ந்த வேதம் மட்டுமல்ல; மனிதத்தை நெறிப்படுத்தும் அறநெறிக் கோட்பாடு என்பதேயாம்!'

இன்று ஈகைப் பெருநாள்.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.