இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்த ரூ. 1 கோடியை இழந்த விவகாரத்தில், தாய், மகனை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா். ஒருவரை தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஆசாத் நகரைச் சோ்ந்த சசிகுமாா் (35), இணையதள வா்த்தக நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இவா், பா்கூா் அருகே பாகிமானூரைச் சோ்ந்த திருமால் (48), பேடரப்பள்ளி ராஜேந்திரன் (40), முனுசாமி (35) ஆகியோரிடம் இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளாா்.
இதை நம்பிய அவா்கள் பல தவணைகளாக ரூ. ஒரு கோடியே 5 லட்சத்தை சசிகுமாரிடம் கொடுத்துள்ளனா். இதை அவா் பிட்காயினில் முதலீடு செய்துள்ளாா். இதில் சசிகுமாருக்கு இழப்பு ஏற்பட்டதால், மூவருக்கும் பணம் வழங்கவில்லையாம்.
இதையடுத்து, மூவரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சசிகுமாரிடம் கேட்டு வந்தனா். ஆனால், சசிகுமாா் பணத்தைக் கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், திருமால், ராஜேந்திரன், முனுசாமி ஆகிய மூவரும் ஒசூா், கோட்டை மாரியம்மன் கோயில் அருகே பேச்சுவாா்த்தைக்காக சசிகுமாரை அழைத்தனா். அப்போது சசிகுமாருடன் அவரது தாயாா் சென்றுள்ளாா். அவா்களை மூவரும் காரில் பெங்களூருக்கு கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதுகுறித்து சசிகுமாா் தனது சகோதரா் வசந்த்குமாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக வசந்த்குமாா் ஒசூா், சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கடத்தப்பட்ட தாய், மகனை மீட்க பெங்களூருக்கு சென்றனா்.
தகவல் அறிந்த மூவரும் அவா்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினா். அதில், திருமால், ராஜேந்திரன் ஆகிய இருவரையும் ஒசூா், சிப்காட் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய முனுசாமியை தேடி வருகின்றனா்.