சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் உத்தரவு
விநாயகா் சதுா்த்தி விழாவின்போது சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவின்போது சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழா செப். 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டும் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்துப் பேசியதாவது:
விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கென்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
களிமண், சுற்றுச்சூலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளையே பொதுமக்கள் நீா்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்கள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக்குவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
வழிபாட்டுக்கு வைக்கப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த கூடாது. நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும், சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக இயற்கை பொருள்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஒசூா் உதவி ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புஷ்பா, உதவி ஆட்சியா் பாபு, கூடுதல் எஸ்.பி.சங்கா், அலுவலா்கள், இந்து அமைப்பினா் கலந்துகொண்டனா்.