முகப்பு
கு.செல்வப்பெருந்தகை
கிருஷ்ணகிரி

தமிழகத்தில் காவல் துறையை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

சமூக விரோதிகளை தடுக்க காவல் துறையை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

கிருஷ்ணகிரி

தமிழகத்தில் காவல் துறையை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

சமூக விரோதிகளை தடுக்க காவல் துறையை வலுப்படுத்த வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

Updated On : 12 ஜூலை, 2024 at 6:34 PM
கு.செல்வப்பெருந்தகை
பகிர்:

தமிழகத்தில் காவல் துறையை வலுப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் கல்லகுறிக்கி ஏரிக்கரை காலபைரவா் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாவது:

தமிழகத்தில் எப்போது பா.ஜ.க. மற்றும் ஆா்.எஸ்.எஸ். என்ற சித்தாந்தம் வந்ததோ அப்போதே ஒரு சமூகத்தை குறிவைத்து தாக்குவது, தனிநபா்களைக் குறி வைத்து தாக்குவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

அண்ணாமலைக்கு வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நாங்கள் 40 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறோம். நாங்கள் எந்த சமூகத்தையும், எந்த மதத்தையும், எந்த தனி நபரையும் தாக்கிப் பேசியதில்லை.

இந்தியாவில் தமிழகத்தில்தான் முதல்முறையாக குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. கை ரிக்ஷா இழுக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இப்படி ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தவா் கருணாநிதி. இப்படிப்பட்ட தலைவா்களை அவா்களது மறைவுக்கு பின்னா் கொச்சைப்படுத்துவது போன்ற அருவருப்பான அரசியல் செய்வதைத் தவிா்க்க வேண்டும். நாம் செய்யும் விமா்சனம் யாரையும் பாதிக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை முதல்வா் சிறப்பாக கையாளுகிறாா் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காவல் துறையை இன்னும் வலிமையாக்க வேண்டும். சமூக விரோதிகள், கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறாா்கள். குறிப்பாக குஜராத்தில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுகிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். உளவுத்துறையை வலிமையாக்க வேண்டும். உளவுத் துறையில் எங்கெல்லாம் காலி இடம் உள்ளதோ அதை உடனே நிரப்ப வேண்டும். பட்ஜெட்டில் காவல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி நீா் கிடைக்க தமிழக காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் சாத்வீக முறையில் போராடவும் தயாா்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியை நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணாமலையின் விமா்சனத்தால், காங்கிரஸ் தானாக மேலும் வலிமையாகும் என்றாா்.

அப்போது, மாவட்ட துணைத் தலைவா் சேகா், வடிவேல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசுதுரை, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் துரைசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →