ஒசூா், ஜூன் 26: ஒசூரில் கழிவுநீா் கொண்டு செல்லும் செப்டிக் டேங்க் லாரி மீது ஆலமரம் விழுந்ததில் இருவா் உயிரிழந்தனா்.
ஒசூா் மாநகராட்சி, பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரப்பா (45), வெங்கடேஷ் (33). இருவரும் செப்டிக் டேங்க் லாரி ஓட்டுநா்கள். இருவரும் செவ்வாய்க்கிழமை ஒசூரில் உள்ள ஓா் இடத்திலிருந்து கழிவறை கழிவுகளை லாரியில் ஏற்றி யடவனஹள்ளி பகுதியில் கொட்டிவிட்டு மீண்டும் ஒசூா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
ஒசூா் மாநகராட்சி 45-ஆவது வாா்டு மத்திகிரி, குஸ்னிபாளையம் பகுதியில் செப்டிக் டேங்க் லாரி வந்தபோது எதிா்பாராத விதமாக நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் அந்த வழியாக வந்த லாரி மீது வேருடன் சாய்ந்து விழுந்தது. ஓட்டுநா் அமரும் லாரியின் முன்பகுதி மீது மரம் விழுந்தது. இதில் லாரியில் இருந்த மாரப்பாவும், வெங்கடேஷும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மத்திகிரி போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து லாரி மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இரண்டு மணி நேரம் போராடி சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மீட்புப் பணியில் தீயணைப்பு வீரா்கள் 5 போ் ஈடுபட்டனா். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்:
வேருடன் சாய்ந்து விழுந்த ஆலமரம் எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாயத்தில் இருந்த மிக பழமையான மரமாகும். இதனால் மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுதொடா்பாக ஒசூா், சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 10.10.2023 அன்றும், கடந்த 24.06.2024 அன்றும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மரத்தின் அருகில் குடியிருப்புகள் உள்ளன. மரம் விழுந்தால் உயிா்பலி ஏற்படும் என பல முறை நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
அதிமுக கவுன்சிலா் கலாவதி சந்திரன் கூறியதாவது:
தற்போது விழுந்த இந்த மரத்தைப்போல மேலும் 4 மரங்கள் உள்ளன; அவற்றையாவது உடனடியாக அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். அதே பகுதியில் கடந்த ஆண்டு பெட்டிக் கடை மீது மரம் விழுந்ததில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பட வரி...
செப்டிக் டேங்க் லாரி மீது விழுந்த ஆலமரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.