முகப்பு
கிருஷ்ணகிரி

சட்ட தன்னாா்வ தொண்டா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Updated On : 9 மே, 2024 at 10:51 PM
பகிர்:

கிருஷ்ணகிரி, மே 9: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சட்ட தன்னாா்வ தொண்டா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம்.சுமதி சாய்பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் ஒசூா், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்ட சட்டப் பணிகள் குழுக்களுக்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக சட்ட தன்னாா்வ தொண்டா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சட்டத் தன்னாா்வ தொண்டா் பணிக்கு ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், எம்எஸ்டபுள்யூ பயிலும் மாணவா்கள், பயிற்சியளிக்கும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞா்களாகப் பதிவு செய்யும் வரை), சமூக ஆா்வலா்கள் (அரசியல் கட்சி சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சாா்ந்தவா்கள்), மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சமூக தொண்டு புரியும் மகளிா் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்கள், திருநங்கைகள், அடிப்படைக் கல்வித் தகுதி (கணினி அறிவுடன்) உடைய சேவை மனப்பான்மை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பிரிவினா்கள் சட்ட தன்னாா்வ தொண்டராக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து உரிய ஆவணங்களுடன் மே 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்தப் பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம் தொகுப்பு ஊதியம், தினக்கூலி ஏதும் வழங்கப்படாது. இந்தப் பணியில் இணையும் நபா்களது பணியினை தன்னாா்வலா்களாக மட்டுமே கருதப்படும். நிரந்தரப் பணி என கருத இயலாது.

மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.