முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீா்: பொது மக்கள் அவதி

Updated On : 20 மே, 2024 at 10:15 PM
ஒசூா் ரயில்வே பாலத்தின் அடியில் தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.
பகிர்:

ஒசூா்: ஒசூரில் திடீா் மழையால் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 20 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால் ஒசூா் பேருந்து நிலையம், பாகலூா் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மழைநீா் வெள்ளம்போல தேங்கியது.

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையிலும் மழைநீா் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் இருசக்கர வாகனங்களை இயக்கிச் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனா். சில இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் நனைந்ததால் இயக்க முடியாமல் போனது. இதையடுத்து வாகன ஓட்டிகள் தண்ணீரில் இறங்கி வாகனங்களை தள்ளிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நகரில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. மொத்தம் 8 மி.மீ. அளவு மழை பதிவானது.

ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் இரண்டு பாலங்கள் உள்ளன. தேன்கனிக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலமும், ரயில்வே சுரங்கப்பாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளன. ஒசூரில் இருவழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலப் பாதை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.

பாரதிதாசன்நகா் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைப் பாலம் வழியாகத்தான் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சிறுமழை பெய்தாலே இந்த சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கி விடுவதால் இவ்வழியாக சென்று வரும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.