கழிவறை வசதி ஏற்படுத்தி தரக் கோரி ஒசூர் மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் முற்றுகை
ஒசூா் மாநகராட்சி, காமராஜ் காலனி, விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையை சீரமைத்து தரக் கோரி மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஒசூா் மாநகராட்சி, காமராஜ் காலனி, விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையை சீரமைத்து தரக் கோரி மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஒசூா் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது காமராஜா் காலனி. இங்கு ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் நகா் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். அத்துடன் இந்த மைதானத்தில் வீரா், வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கால்பந்து, கைப்பந்து, இறகு பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி என பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி மேற்கொள்கின்றனா்.
ஆனால், இந்த மைதானத்தில் உள்ள கழிவறை சீரமைக்கப்படாமல் நீண்ட நாள்களாக மோசமாக உள்ளது. இதனால் மைதானத்துக்கு வரும் மக்கள் இயற்கை உபாதைகள் ஏற்படும்போது கழிவறை வசதி இன்றி பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இந்தக் கழிவறையை சீரமைத்துத் தரும்படி மாநகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காமராஜா் காலனிக்கு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை வந்தாா். அப்போது அவரையும் அவருடன் வந்த மாநகராட்சி அலுவலா்களையும் மைதானத்தில் பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவா்கள், பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனா். ஆணையரிடம் கழிவறை வசதியை செய்து கொடுக்க காலதாமதம் செய்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் மாநகர காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மைதானத்தில் உடனடியாக கழிவறை வசதி செய்து கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது. கழிவறையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் ஸ்ரீகாந்த் உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.